
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் (Galle Face) உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவிலான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், டிசம்பர் 24 ஆம் திகதி கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த காவல்துறை தீர்மானித்துள்ளது.
கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மருதானை, கொம்பனித்தெரு மற்றும் குருந்துவத்தை ஆகிய பகுதிகளில் மாலை வேளையில் கடும் வாகன நெரிசல் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முடிந்தவரை இயல்பான போக்குவரத்து சீராகப் பேணப்படும் என்றும், வாகன நெரிசல் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காலி வீதி வழியாக கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் காலி முகத்திடல் பகுதியை நோக்கி வரும் வாகனங்கள் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மாத்திரமே அனுமதிக்கப்படும்.
பிரதான வீதிகளில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் வசதிக்காக கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மருதானை மற்றும் குருந்துவத்தை ஆகிய பகுதிகளில் கட்டணத்துடன் கூடிய மற்றும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் டிசம்பர் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
