
தெரிவு செய்யப்பட்ட 09 திட்டங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) இன் கீழ் இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 09 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் தொடர்பான சான்றிதழ்களைக் கையளித்தல் மற்றும் அது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுலலகத்தில் நடைபெற்றது.
அதன்படி, 227 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான சான்றிதழ்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வழங்கப்பட்டன.
இலங்கை வங்கி ஊடாக இந்த நிதி வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான வை.ஏ. ஜயதிலக ஆகியோருக்கு இடையே கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், விண்ணப்பதாரர்களின் திட்டங்களுடன் தொடர்புடைய செயல்திறன் குறிகாட்டிகளுக்கு (KPI) ஏற்ப முன்னேற்றத்தை பரீட்சித்து, பகுதிகளாக வழங்கப்படவுள்ளது.
