
தரையிறங்க முடியாமல் சிக்கிய மோடி!
மேற்கு வங்கத்திற்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உலங்கு வானூர்தி மோசமான வானிலை காரணமாகத் தரையிறங்க முடியாமல் போனது.
வீதி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை மேற்குவங்கம் சென்றிருந்தார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் பகுதிக்கு வீதித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் பிரதமர் மோடி சென்றிருந்தார்.
முற்பகல் 10:40 அளவில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் அவர் தஹெர்பூருக்குப் புறப்பட்டார்.
ஆனால், அங்கு நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாகத் திட்டமிட்டபடி உலங்கு வானூர்தியைத் தரையிறக்க முடியவில்லை.
உலங்கு வானூர்தி ஓடுதளத்திற்கு மேலாகச் சிறிது நேரம் வட்டமடித்தும் வானிலை சீராகாததால், பாதுகாப்பு கருதி விமானி உலங்கு வானூர்தியை மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு சென்றார்.
பிரதமரால் நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டதால், தஹெர்பூரில் காத்திருந்த மக்களுக்காக அவர் காணொளி காட்சி வாயிலாகத் தனது உரையை நிகழ்த்தினார்.
