
கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதிய பாரவூர்தி
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாரவூர்தி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிமடையில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியின் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பிரேக் இயங்காமையே சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையின் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் எனினும் பாரவூர்தியில் பயணித்தவர்கள் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டது இருந்தும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கனரக வாகனங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அத்துமீறி செல்லும் நிலை தொடர்ந்து இருக்கிறது இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது .
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியானது 3.2 கிலோமீட்டர் தூரம் கொண்டதும், பாரிய வளைவுகளையும், பள்ளத்தையும் கொண்டது.
எனவே நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

