குற்றவியல் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த அமெரிக்கா – இலங்கை கூட்டு முயற்சி!

 

இலங்கையின் 500-க்கும் மேற்பட்ட புதிய சட்டத்தரணிகளுக்கு, வழக்கு விசாரணை மற்றும் குற்றவியல் சட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த விசேட பயிற்சித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தன.

அமெரிக்க நீதித் திணைக்களத்தின் வெளிநாட்டு வழக்கு மேம்பாடு, உதவி மற்றும் பயிற்சி அலுவலகத்தின் (OPDAT) கீழ் இந்தப் பயிற்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டது.

புதிய சட்டத்தரணிகளின் தொடர்ச்சியான சட்டக் கல்வியை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

நாடுகடந்த குற்றங்கள் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சட்ட ஒத்துழைப்பை இது வலுப்படுத்துகிறது.

புதிய சட்டத்தரணிகளே நீதித்துறையின் எதிர்காலம் எனத் தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதரகம், இவ்வாறான பயிற்சிகள் சட்டத்துறையின் தரத்தை உயர்த்த உதவும் எனத் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையினருடன் இணைந்து சட்டத்தரணிகள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.