
மோட்டார் போக்குவரத்துத் துறையில் புதிய சீர்திருத்தங்கள்!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வேரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது, பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல அவசர நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் இலகுவாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் உடனடியாக ‘வரிசை மேலாண்மை முறைமையை’ (Queue Management System) அறிமுகப்படுத்தவும், பிரதான நுழைவாயிலில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய டிஜிட்டல் முறைமையை (DMT System) 2026 ஏப்ரல் 30-ஆம் திகதிக்குள் கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய அறிவித்தல்களுக்குப் பின்னர், 2026 பெப்ரவரி 28-ஆம் திகதி முதல் முன்கூட்டிய பதிவுகள் (Appointments) இல்லாத சேவைகளை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தின் முதலாவது புதுப்பித்தல் காலத்தை 35 வயது வரை நீடிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்குமாறும், இதனால் அரசாங்க வருமானத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் வழக்கமான நடைமுறைகள் மூலம் அனுமதிப்பத்திரம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்காக, வேரஹெர அலுவலகத்திலேயே வசதிகளை மேம்படுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் போது டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
