
பேரிடர் முகாமைத்துவத்திற்கு தனி அமைச்சு அவசியம்: சஜித் கோரிக்கை
அனர்த்தங்களைத் தடுப்பதற்கும் அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக பேரிடர் முகாமைத்துவத்திற்கான தனி அமைச்சொன்றை உருவாக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு, அனர்த்தத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
குறிப்பாக, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
