
இலங்கைக்கு மேலும் பல உதவிகளை வழங்கிய பாகிஸ்தான்
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிவாரணத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களின் தொகுதி இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஃபஹீம் உல் அசிஸ் இந்த நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை (NDMA) மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அனுப்பப்பட்ட இந்தத் தொகுதியில், அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவும் நோக்குடன் சுமார் 200 மெட்ரிக் டன் மனிதாபிமான உதவிகள் அடங்கும்.
இதன்படி கூடாரங்கள், போர்வைகள், கம்பளிப் போர்வைகள், பாய்கள், உயிர் காக்கும் மேலங்கிகள், நீரில் மிதக்கக்கூடிய படகுகள்,மருந்துகள், பால் மா, கொசுவலைகள் மற்றும் முகாமிற்கான விளக்குகள் என்பன பாகிஸ்தானினால் அனுப்பப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாக பாகிஸ்தானின் இந்த உதவி அமைந்துள்ளது.
இந்த நிவாரணப் பொருட்கள் வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும்.
