டிட்வா தாக்கத்தில் தேயிலைத் துறை பாதிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் டிட்வா சூறாவளியால் தேயிலை தொழிலுக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்பினை துரிதகதியில் பழைய நிலைக்கு கொண்டு வரும் செயல்பாட்டில், இலங்கை தேயிலை சபை ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால், குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் தேயிலை தொடர்புடைய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கூட்டு நடவடிக்கை இலங்கை தேயிலை உற்பத்தி சங்கிலியை பழைய நிலைமைக்கு கொண்டு வரமுடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேயிலை தொழிலின் உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதிலும், சர்வதேச தேயிலை விநியோகத்தை மேம்படுத்துவதிலும் இலங்கை தேயிலை சபை ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தவிர, இலங்கை தேயிலைத் துறையினரால் முன்னெடுக்கப்படும் நிரந்தர தொழிற்சாலை மற்றும் உற்பத்தி திறன் இழப்பு ஏற்படவில்லை.

தற்காலிக தொழிலாளர் வெற்றிடங்கள் மற்றும் மாறுபட்ட வானிலை காரணமாக உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படும் என ஆரம்ப கணிப்புகள் தெரிவித்திருந்த போதிலும், தற்போதைய நிலையில் துரிதகதியில் இந்த தொழில்துறையினை மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.