
மான் இறைச்சியுடன் சந்தேக நபர்கள் கைது
பளவழிகிராமம் (12 வீட்டுத்திட்டம்) புதிய வளத்தாப்பிட்டி, சம்மாந்துறை பகுதியில் தம்வசம் மான் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த இரு நபர்களும் பிடியில்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி உட்பட வேன், மோட்டார் சைக்கிள், ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் வழிகாட்டுதலில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
