
சிலாபத்தில் இயங்கும் ஜப்பானிய கள மருத்துவமனையை பார்வையிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ
அண்மைய வெள்ளப் பெருக்குகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, ஜப்பானின் அனர்த்த நிவாரணக் குழு (JDR) சிலாபம் பொலிஸ் மைதானத்தில் முழுமையாக வசதியளிக்கப்பட்ட நடமாடும் கள மருத்துவமனையை நிறுவியுள்ளது.
டிசம்பர் 4 ஆம் திகதி முதல் இயங்கும் குறித்த மருத்துவ சேவைகள் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மருத்துவ சேவைகள் முன்னெக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 100 இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வெள்ளிக்கிழமை குறித்த மருத்துவமனையைப் பார்வையிட்டார்.
அவசரகாலத்தின் போது வேகமான பதிலளிப்பிற்காக அவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
அனர்த்தங்களின் போது ஜப்பான் நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவைக் குறிப்பிட்ட அமைச்சர், ஜப்பானின் அனர்த்த நிவாரணக் குழுவினரின் உடனடி வருகையும் திறமையான மருத்துவ சேவைகளும் உள்ளூர் மீட்பு முயற்சிகளுக்கு முக்கியமானவை என்றும் எடுத்துரைத்தார்.
பாதிக்கப்பட்ட அல்லது இடம்பெயர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்ய, இந்த கள மருத்துவமனை இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ராஜேஷ் சம்பாஜிராவ் பண்டாவ், சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
