
அனர்த்தங்களைத் தொடர்ந்து மாரடைப்பு அபாயம் 40% அதிகரிப்பு!
டிட்வா சூறாவளி போன்ற பெரும் அனர்த்தங்களைத் தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் சுமார் 40% வரை உயரக்கூடும் என்று உலகளாவிய ஆய்வுகள் காட்டுவதாக இருதய நோய் நிபுணர் வைத்தியர் கோத்தாபய ரணசிங்க (Gothabhaya Ranasinghe) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்ததாவது “கடும் உளவியல் அழுத்தம், திடீர் இழப்பு, அதிர்ச்சி மற்றும் இடம்பெயர்வு ஆகியவை கடுமையான உளவியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன.
இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
இது குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு மாரடைப்பைத் தூண்டும் என தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பலரும், இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு மற்றும் இரத்தத்தை உறையாமல் தடுக்கும் மருந்துகள் உட்பட தங்களது வழக்கமான மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.
இது இருதய ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.
அத்துடன் ஒழுங்கற்ற உணவு இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு மற்றும் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கின்றது.
மேலும் மார்பு அசௌகரியம் அல்லது இருதயம் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுவ செரிய அம்புலன்ஸ் (1990) போன்ற உடனடி உதவிக்கு கிடைக்கக்கூடிய சேவைகளைப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.
