
சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85% சீரமைப்பு
அவசர அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரம் தடைப்பட்ட சுமார் 39 இலட்சம் நுகர்வோரில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார்.
அனர்த்த செயற்பாட்டு ஊடக மையத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 07 கோடி மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 39 இலட்சம் பேர் மின்சார இணைப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
அவசர நிலைமையில் 16,771 மின்மாற்றிகள் செயல்படாமல் இருந்ததாகவும், அவற்றில் 14,549 மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தடைப்பட்ட எஞ்சிய மின் இணைப்புகள் விரைவில் மீளமைக்கப்படும் என்றும், இந்தச் செயல்பாட்டில் ஒரு மின் ஊழியர் உயிரிழந்ததாகவும், அது குறித்து அனுதாபம் தெரிவிப்பதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
