யாழில் இளைஞன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : கார் ஒன்று மீட்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி சந்தைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டும் மழைக்குள் மத்தியில் வீதியில் இளைஞன் ஒருவரை ஓட ஓட வன்முறை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் மறுநாள் திங்கட்கிழமை இளைஞனை வெட்டிய நால்வரில் இருவர் உள்ளிட்ட 06 பேரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 06 பேரையும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும், மேலும் சில சான்று பொருட்களை மீட்கவும் , சந்தேகநபர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பொலிசாரின் விண்ணப்பத்தை அடுத்து, சந்தேகநபர்களை 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்தது.

அதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணையின் போது, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது, எவரேனும் பின் தொடர்ந்தால், அவர்களிடம் இருந்து கொலையாளிகளை காப்பாற்றும் நோக்குடன், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தவாறு கொலையாளிகளை பின் தொடர்ந்த கார் தொடர்பில் பொலிஸார் கண்டறிந்து, குறித்த காரினை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாருக்கு நீதிமன்று அனுமதித்த 24 மணிநேரம் நேற்றைய தினம் புதன்கிழமையுடன் நிறைவுற்றதால் நேற்றைய தினம் சந்தேகநபர்கள் 06 பேரையும் மீண்டும் மன்றில் முற்படுத்தியவேளை 06 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, இளைஞனை கொலை செய்த நால்வரில் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், கொலையாளிகள் தப்பி செல்ல பாதுகாப்பு அளித்து சென்ற காரினை மீட்டுள்ள நிலையில், காரில் பயணித்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.