
இலங்கைக்கு உதவ முன்வந்த 70 நாடுகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, சுமார் 70 நாடுகள் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக மனிதாபிமான உதவிகளை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறினார்.
உதவிகளை வழங்க முன்வந்த நாடுகளில் சீனா, ஜேர்மனி, ஜப்பான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் 200 மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நாடுகள் அவசரகால உதவிகளை மட்டுமின்றி, எதிர்காலத்தில் புனரமைப்புச் செயற்பாட்டிற்குத் தேவையான நிதி மற்றும் இயந்திரங்கள் போன்ற உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
