
போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும், அவை சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணானவை என்றும், அந்த யோசனைகள் அனைத்தையும் உள்ளடக்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்தத் தகவல்களைக் கருத்தில் கொண்டு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் அறிவியல் ரீதியான வழிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்கும் வகையில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய சட்ட வரைவைத் தயாரிக்குமாறு நீதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஆராயப்பட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் போது , அந்த இடத்திற்கு நீதவானை அழைத்து விசாரணை நடத்தவும், பகுப்பாய்வு அதிகாரி ஒருவரை அழைத்து மாதிரியைப் பெறவும், பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கும் ஏற்ற வகையில் இந்த சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தற்பொழுது திட்டமிட்டுள்ளவாறு பகுப்பாய்வு அதிகாரி வெற்றிடங்களை நிரப்ப நிரந்தர மற்றும் தற்காலிக நியமனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
டிசம்பர் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களையும் இணைத்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ” அகன்று செல்” திட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களும் போதைப்பொருட்களற்ற நிறுவனங்கள் என்பதை உறுதி செய்வதற்கு அந்த நிர்வாகத்தினால் முடியுமாக இருக்க வேண்டும் .
அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
