சுவிட்சர்லாந்தில் பாணில் கடத்தல் : இருவர் கைது
சுவிஸ் சுங்கத்துறையினர் செயிண்ட் மார்கிரெதன் எல்லையில் இருவர் கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
திங்கட்கிழமை காலை, சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் அதிகாரிகள் சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்ட ஒரு வாகனத்தை செயிண்ட் மார்கிரெதன் எல்லைக் கடவையில் தடுத்து நிறுத்தினர்.
பிரெஞ்சு இலக்கத் தகடுகளைக் கொண்ட கார், வழக்கமான சோதனைக்கு உட்படுத்திய போது பல ஆயிரம் பெறுமதியான ஆபரணங்கள் உட்பட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காரின் இயந்திரப் பகுதியிலும் மற்றும் உட்புறத்திலும், சுங்க அதிகாரிகள் பல நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு தங்க வ்ரெனெலி நாணயத்தைக் கண்டுபிடித்தனர். சில பொருட்கள் முற்றிலும் எதிர்பாராத காரின் இடத்தில் காணப்பட்டுள்ளன.
சில ஆபரணங்கள் பாணில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சூரிச் மாகாணத்தில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது நகைகள் திருடப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தில் இருந்த இருவரும் ருமேனியர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் செயிண்ட் காலன் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சூரிச் மாநில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இருவரும் நேரடியாக கொள்ளையில் ஈடுபட்டார்களா அல்லது நகைகளை கடத்திச் சென்றார்களா என்பது குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து பொலிசார் மேலதிக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
