வயதைச் சரிபார்க்குமாறு ஸ்னாப்சாட் வேண்டுகோள்!

அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்று ஸ்னாப்சாட் (Snapchat )கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உலகின் முதல் சமூக ஊடகத் தடையை அமுல்படுத்த அவுஸ்திரேலியா தயாராகி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்களுக்கு இணங்கத் தவறினால் 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (31.95 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தும் இந்தச் சட்டம், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்ட உலகின் மிகக் கடுமையான விதிமுறைகளில் ஒன்றாகும்.

ஸ்னாப்சாட்டைத் தவிர, இந்தத் தடை தற்போது யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டோக், ரெடிட், ட்விட்ச் மற்றும் கிக் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

ஸ்னாப்சாட் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கும் கனெக்ட்ஐடி( ConnectID) பயன்பாடு மூலமாகவோ அல்லது சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட வயது உறுதி வழங்குநரான கே-ஐடிக்குச் (k-ID) சொந்தமான மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ தங்கள் வயதைச் சரிபார்க்க முடியும் என்று அறிக்கை வெளியிட்டு அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

புதிய தனியுரிமை அபாயங்களை உருவாக்காமல் இளைஞர்களை ஒன்லைனில் பாதுகாப்பதே இதன் குறிக்கோள்” என்று ConnectID நிர்வாக பணிப்பாளர் எண்ட்ரூ பிளாக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.