
மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : மருத்துவ செலவு குறைகிறது!
சுமார் 350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலை கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைகளை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் நுகர்வோர் நியாயமான விலையில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த புதிய நடவடிக்கை இலங்கையின் மருந்து விநியோகத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றது.
இந்தத் தீர்மானத்தின் காரணமாக, சந்தையில் தற்போதுள்ள பல மருந்துகளின் விலைகளைக் கணிசமாகக் குறைக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நியாயமற்ற இலாபத்தைப் பெறுவதைத் தடுப்பதற்கும், தன்னிச்சையான விலையேற்றங்களைத் தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவியுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய மருந்துகளைப் பொதுமக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக மருந்து வர்த்தகம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விலை கட்டுப்பாட்டு முறை நாட்டின் மருந்துக் கொள்கையைப் பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
