திருகோணமலை மாவட்ட அரச அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

திருகோணமலை மாவட்ட அரச அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரால் வரவேற்பு உரையும் பயிற்சியின் நோக்கங்களும் விளக்கப்பட்டன.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பணிக்கூற்று பற்றிய விரிவுரையை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன்சந்திர வழங்கினார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட செயலகத்தின் அனுபவங்களை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார பகிர்ந்து கொண்டார்.

பொது அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களையும் 2017 முதல் நடைமுறைக்கு வந்த விதிகளையும் வழக்கறிஞர் ஜகத் லியனாராச்சி எடுத்துரைத்தார்.

குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அரச அலுவலர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதற்கான தக்க பதில்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தவிசாளர் தயா லங்காபுர, வழக்கறிஞர் திருமதி கிஷாலி பிண்டோ ஜயவர்தன, வழக்கறிஞர் மொஹமட் நஹியா ஆகியோர் கலந்து கொண்டனர்.