வடக்கு கிழக்கு மீனவ இணைப்பு காலத்தின் தேவை
-யாழ் நிருபர்-
வடக்கு – கிழக்கு இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஜாட்சன் பிரிடாரோ தெரிவித்தார்.
சர்வதேச மீனவ தினத்தை முன்னிட்டு, நேற்று வியாழக்கிழமை நயினாதீவில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மீனவர்கள் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னரான காலத்திலும் வடக்கு கிழக்கு மீனவ சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு கடல் வளங்கள் உள்ளுர் மீனவர்களாலும் வெளிநாட்டு மீனவர்களாலும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வரும்நிலையில் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
மீனவ சமுதாயத்தை கடற்தொழில் இருந்து ஓரங்கட்டுவதற்கு பல்வேறு வழிகளில் அடக்குமுறைகள் பிரியோகிக்கப்படு வரும் நிலையில் நாங்கள் அதனை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
ஆகவே எமது கடல் வளத்தை பாதுகாப்பதற்கு வடக்கு கிழக்கு இளம் மீனவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது காலம் காலத்தின் கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.


