இரவில் சரியாக தூங்காவிட்டால் உடலுக்குள் நிகழும் மாற்றம்

மாறிவரும் இந்த நவீன வாழ்க்கை முறையால், நம்மில் பெரும்பாலானோர் ஐந்து / ஆறு மணி நேரம் தூங்குவதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொள்கிறோம். மோசமான இந்த தூக்க வரைமுறையால் பெரும்பாலானோர் கண்ணில் கருவளையத்துடனும், தொடர் தலைவலியுடனும் அன்றாட வாழ்க்கையை கழிக்கிறோம்.

இந்த நிலையில்தான், சமீபத்திய ஆய்வுகள் சில, ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் பல்வேறு உடல் இயக்கம் பாதிக்கப்படுகிறது என்றும் இதனால் மூளை ஆரோக்கியம் தொடங்கி இதய நலன், நோய் எதிர்ப்புத் திறன் உட்பட பல விஷயங்கள் பாதிக்கப்படுவதாக நிரூபித்துள்ளன.

இதன் காரணமாக, 18 வயதைக் கடந்துவிட்டாலே, குறைந்தது 7 மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ தூக்க நேரத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அப்படியன்றி அன்றாடம் 6 அல்லது அதற்கு குறைந்த மணி நேரம் தூங்கினால், பல்வேறு வழிகளில் உடல் இயக்கம் பாதிக்கப்படும் என்கின்றனர்.

இவற்றை உறுதி செய்யும் வகையில் நேச்சர் நியூரோசயின்ஸ் என்ற மருத்துவ இதழில் கடந்த அக். 29 வெளியான ஆய்வொன்றில், ‘இரவு சரியான தூக்கம் இல்லாமல் இருப்போருக்கு (7 – 9 மணி நேரத்துக்கும் குறைவாக), அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் செரிப்ரோ-ஸ்பைனல் என்ற திரவத்தை மூளை தன்னிடமிருந்து வெளியே தள்ளும். இது நாள்முழுக்க தான் சேமிக்கப்பட்ட தேவையில்லாத விஷயங்களை மூளையே வெளியே தள்ளும் ஒரு ப்ராசஸ்.

இது நாம் தூங்கும்போது உடலில் இயல்பாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இரவில் தூக்கம் சீராக கிடைக்காத போது, பகலில் நடக்கிறது. நேரம் மாறி நடக்கும்போது, நாம் Zone Out ஆகிவிடுகிறோம். இதனால் உடல் விரைந்து சோர்வடைகிறது (சீரான தூக்கம் இருந்தவர்களுக்கு அவர்கள் விழித்திருக்கும்போது CSF திரவம் அதிகம் வெளிவராதது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது).

இதுமட்டுமன்றி மேலும் CSF ஓட்டமானது, கண்ணின் கருவிழி அளவிலும் தாக்கம் செலுத்துகிறது என்கிறது ஆய்வு. விழிகள் அதிக நேரம் செயல்படுவதால் இது நடப்பதாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் மூளை ஆரோக்கியமாக இருக்க, தூக்கம் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதிலும் பெரியவர்கள் என்றால் 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.