-நுவரெலியா நிருபர்-
ஈஸி கேஸ் முறைமையில் பணத்தை பெற்றுக்கொண்டு, பிரதான வீதியோரத்தில் விட்டு சென்ற ஹெரோயின் போதைப்பொருளை, பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்ததாக நம்பப்படும் இளைஞன் ஒருவரையும், ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில்,
டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இரண்டு இளைஞர்களை பின் தொடர்ந்து கண்காணித்து சோதனை செய்தபோது, பிரதான வீதியோரம் புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஹெரோயின் பொட்டலத்தை பொலிஸ் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
குறித்த இடத்தில், இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து, மேற்கொண்ட விசாரணையில், ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சந்தேக நபர் ஈஸி கேஸ் மூலம் 6,000 ரூபாய் பணம் பரிமாற்றம் செய்து, போதைப்பொருள் பொட்டலத்தை வாங்குவதற்கு திட்டம் தீட்டியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், போதைப்பொருட்களை விநியோகம் செய்த பிரதான போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்காக, சந்தேக நபரின் தொலைபேசி அறிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தனர்.




