
மனைவிக்கு தெருநாய்கள் மீது காதல் : விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற கணவன்!
தெருநாய்கள் பிரச்சினையால் 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு கோரி நீதிமன்றை நாடியுள்ளார்.
இச்சம்பவம் இந்தியா குஜராத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாகக் கூறி வருகிறார்.
திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மனைவி ஒரு தெரு நாயைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்து அவர் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.
அந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார்.
இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார்.
மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது.
அயலவர்களும் அப்பெண் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
இந்நிலையில் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தனியாக இடம்பெயர்ந்துள்ளார்.
இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தைக் காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது எனக் கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனைவிக்கு, இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபா ஜீவனாம்சம் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் அவரது மனைவியோ தனக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபா வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
