மாலைதீவு கடலில் இலங்கையர்கள் கைது

“அவிஷ்க புத்தா” என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை மாலைதீவு காவல்துறை சேவை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் வைத்து குறித்த படகு இடைமறிக்கப்பட்டது.

காவல்துறை அறிக்கையின்படி, தேசிய கடல்சார் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி, அனுமதி இன்றி மாலைதீவு நீர்ப்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த பின்னர், மாலைதீவு தேசியப் பாதுகாப்புப் படையின் கரையோரக் காவல்படையால் (MNDF) குறித்த படகு கைப்பற்றப்பட்டது.

MNDF அதிகாரிகளின் ஆரம்ப சோதனையின் போது, போதைப்பொருட்களைக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, விசாரணைகளுக்காக ஞாயிற்றக்கிழமை படகும், அதிலிருந்த ஐந்து இலங்கை குழுவினரும் மாலைதீவு காவல்துறை சேவையிடம் ஒப்படைக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 10  படகில்மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், 24 பைகளில் 355.9 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் சுமார் 58.6 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 297.3 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) என்பன அடங்கும். ஐந்து சந்தேக நபர்களான 39, 42, 28, 34, மற்றும் 63 வயதுடைய இலங்கை ஆண்கள், தற்போது மாலைதீவு காவல்துறை சேவை, MNDF, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறை ஆகியன இணைந்து நடத்தும் கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப் படகுகளைப் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடல் முழுவதும் செயல்படுவதாக நம்பப்படும் பிராந்திய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்கு விழுந்த ஒரு பெரிய அடி என்று அதிகாரிகள் இந்த கைப்பற்றலை வர்ணித்துள்ளனர்.

மாலைதீவு நீர்ப்பரப்பில் இதுவரை பதிவான மிகப் பெரிய போதைப்பொருள் கைப்பற்றல்களில் இதுவும் ஒன்றாகும்.