
நீண்ட அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர செனட் சபை உறுப்பினர்கள் இணக்கம்!
வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க செனட் சபையில் தேவையான நிதியுதவி சட்டமூலங்கள் நிறைவேற்றப்படாமையால், பெடரல் அரசாங்கம் 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், இந்த முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒப்பந்தத்திற்குச் செனட் சபை உறுப்பினர்கள் இவ்வாறு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தத்திற்கு வாக்களிக்க ஜனநாயகக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால், அமெரிக்கா முழுவதும் அரசாங்க சேவைகள் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு பல தடைகள் உள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வர எவ்வளவு காலம் எடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
