உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு
உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலை எனக் கருதப்படும் மிகப்பெரிய சிலந்தி வலை ஒன்றை, கிரேக்கம் – அல்பேனியா எல்லையிலுள்ள இருண்ட குகையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 106 மீற்றர் பரப்பளவு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிவிசாலமான சிலந்தி வலைக்குள் 1,11,000-க்கும் மேற்பட்ட சிலந்திகள் வாழ்கின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சிலந்தி வலை 2 வெவ்வேறு இன சிலந்திகளை உள்ளடக்கியது என்பதுதான் இந்த கண்டுபிடிப்பை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
பொதுவாக சிலந்திகள் தனித்தனியாக வாழும் உயிரினங்கள் என்பதால், இவ்வாறு கூட்டாக உருவாக்கப்பட்ட வலைகள் மிகவும் அரிது.
மேலும், 2 இனச் சிலந்திகள் இணைந்து ஒரே வலையை உருவாக்குவது இதுவரை பதிவாகாத நிகழ்வாகும்.
இந்த கண்டுபிடிப்பை விசித்திரமாக்குவது என்னவெனில், வீட்டுச் சிலந்தி (Tegenaria domestica) பொதுவாக சிறிய சிலந்திகளை வேட்டையாடி உண்பது வழக்கம்.
ஆனால் இக்குகையில், அது சிறிய ஷீட் வீவர் சிலந்திகளுடன் இணைந்து வாழ்ந்தது மற்றும் வேலை செய்தது.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது குகைக்குள் ஒளி இல்லாமை மற்றும் பெருமளவு உணவு கிடைப்பது ஆகியவை இச்சிலந்திகள் ஒருவரையொருவர் தாக்காமல் இணைந்து வாழக்காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தக் குகையில் காணப்படும் சிறிய ஈக்கள் (midges) சிலந்திகளுக்குப் பிரதான உணவாக இருந்தன.
மேலும், DNA பரிசோதனைகள் மூலம் இந்தக் குகையில் வாழும் சிலந்திகள் வெளிப்புற சிலந்திகளிலிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டவை என்று தெரியவந்துள்ளது.
இதனால், அவை குகை சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
