அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 11 கோடி ரூபாய் வென்ற வியாபாரி : உதவிய நண்பனுக்கு 1 கோடி!

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஒருவர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் இந்திய மதிப்பில்  11 கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா, வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் சென்றிருந்தார்.

அங்கு அம்மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் (இந்திய மதிப்பில்) ரூ.11 கோடி மெகா பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததை அறிந்தார்.

ஆனால் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்குவதற்குத் தேவையான பணம் கையில் இல்லை. எனவே தனது நண்பரான முகேஷ் என்பவரின் உதவியை நாடினார்.

அவர் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்குவதற்கான பணத்தைக் கடனாகக் கொடுத்து உதவினார்.

இதையடுத்து, அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

இந்த நிலையில், கடந்த 31 ஆம் திகதி மெகா அதிர்ஷ்டலாப சீட்டுப் பரிசுக்கான குலுக்கல் நடந்தது. இதில் அமித் சேரா வாங்கிய சீட்டுக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்தது.

இதையறிந்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

‘இது எனக்கு கடவுள் கொடுத்த எதிர்பாராத ஆசீர்வாதம். இந்த பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்துவேன். அதுமட்டுமின்றி இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கப் பணம் கொடுத்து உதவிய எனது நண்பர் முகேசுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன்’ என்றும் அமித் சேரா தெரிவித்துள்ளார்.