சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் தாக்கம் : 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து!

கடந்த ஆண்டு மட்டும் இந்தோனேஷியாவில் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

விவாகரத்துக்கள் அதிகரிப்பு குறித்து அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளியுறவுத் தகவல்களின் படி, இந்தோனேஷியாவில் தற்போது குடும்பங்களின் நிலைத்தன்மை மஞ்சள் எச்சரிக்கை நிலையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இது ஆபத்தான நிலையை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் மத விவகார அமைச்சர், தற்போது நாட்டில் திருமண முறிவு மற்றும் குடும்பத் தகராறுகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

கையடக்கத் தொலைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் வெளிநட்பு மற்றும் வஞ்சக உறவுகள் எளிதில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், திருமண உறவுகளில் பிரிவு அதிகரித்துள்ளது.

மேலும், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி காரணமாக, காதல் தொடர்புகள் வைத்தல் அல்லது துரோகம் செய்வது மிகவும் எளிதாகி விட்டது எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் ,மக்கள் விழிப்புடன் செயற்படாவிட்டால், இறுதியில் நாமே சமூக ஊடகங்களின் அடிமைகளாகி விடுவோம், எனவும் அவர் எச்சரித்தார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, விவாகரத்திற்கான முக்கிய காரணங்களாக தம்பதிகள் இடையிலான மோதல்கள், பொருளாதார அழுத்தம், மற்றும் குடும்ப வன்முறை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.