முதியோர் இல்லத்தில் தீ விபத்து

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் (Bosnia and Herzegovina) உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், இங்கு தங்கியிருந்த வயதானவர்களும், உடல்நலம் பாதித்தவர்களும் தாங்களாகவே வெளியேற முடியவில்லை.

அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின்படி, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், மின்கசிவு காரணமாகக் குறித்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உறுதியான காரணம் தெரியாத நிலையில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.