தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-மூதூர் நிருபர்-

“முழு நாடுமே ஒன்றாக “என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை -தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று திங்கட்கிழமை கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைவாக சமூகப் பொலிஸ், சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் திருகோணமலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.கே.எம்.சவாஹிர் கலந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

இதன்போது போதைப்பொருள் என்றால் என்ன? போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ,மாணவர்கள் போதைப்பொருள் தொடர்பாக கையாள வேண்டிய விடயங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன .

இந்நிகழ்வில் தோப்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும்,பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எப்.எம்.றமீஸ், அல்ஹம்றா மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், தோப்பூர் பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.