வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தால் யாத்திரை காலத்தில் வரி அறவிட முடியாது

-மஸ்கெலியா நிருபர்-

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆறு மாதங்கள் இடம்பெற்று வரும்போது மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாகவே பெரும்பாலான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதற்காக சபையின் ஊடாக 5 மில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டு வருகின்றது, நுவரெலியா அரசாங்க அதிபரின் ஊடாக 2 மில்லியன் கிடைக்கின்றது, பருவகாலத்தில் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் வர்த்தமானி அறிவித்தல் இல்லாத காரணத்தால் வரி அறவிட்டு வருமானம் பெற முடியாத நிலையில் இருப்பதாக, மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் ஏ.கே. ராஜ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பூரணை தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பமாகி ஆறு மாதங்கள் தொடர்ந்து, மே மாதம் வெசாக் பண்டிகையுடன் நிறைவு பெறுகின்றது.

இக்காலப் பகுதியில் மலையடிவரமான நல்லதண்ணீர் நகரிலிருந்து மலையின் நடுப் பகுதியான ஊசிமலை ( இந்திகட்டுப்பான) வரைக்கும் பாதைகளை துப்புரவு செய்தல், கூட்டுதல், மலசலகூட பராமரிப்பு, குடிநீர் வசதி, சுகாதாரம், வாகனத் தரிப்பிடம், வார இறுதி நாட்களில் மவுசாக்கலை சந்தி வரைக்கும் தரித்து நிற்கும் பாதை பராமரிப்பு முதலானவற்றுக்கு தினசரி 25 ஊழியர்களை மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக சேவையில் ஈடுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

எனினும், போதுமான ஊழியர்களைப் பெற்றுக் கொள்ள முடியாமலும் உள்ளது.

இம்முறை யாத்திரை காலத்தில் பொலித்தின் பாவனை முற்றாகத் தடை பெய்யப்பட்டுள்ளது. யாத்திரை செல்பவர்கள் யாராவது பொலித்தின் கொண்டு சென்றால், அதைப் பெற்றுக் கொண்டு வேறு துணி “பேக்” குகளை தருவதற்கும், யாத்திரிகர்கள், திரும்பி வ்ஸ்ரும் போது பொலித்தின்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை உரிய முறயில் திருப்பித் தந்தால் அவர்களுக்கு சிறிய அன்பளிப்பு வழங்கி ஊக்குவிக்கவும், சில நிறுனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

மேலும், மலையுச்சி வரையில் கடந்த காலங்களில் தண்ணீர் போத்தல்கள் 400 – 500 ரூபா வரை விற்கப்பட்டதற்கு எதிராக இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உணவகங்களில் சுகாதாரப் பராமரிப்புகளை மேற்கொள்ளவும், மலையடிவாரத்தில் சுகாதாரப் பிரிவு இருந்தாலும், நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சையளிக்க ஆகக் குறைந்தது இரண்டு வைத்தியர்களைப் பெற்றுக் கொள்ளவும், பாதுகாப்ப்பு வசதிகளைச் செய்து கொடுக்கவும், தொழிலாளர்கள் இல்லாத பிரச்சினையைத் தீர்க்கவும் அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

வருடத்தில் ஆறு மாத காலத்துக்கு சிவனொளிபாதமலை பருவகாலம் இடம்பெற்று வாருவதால் இலங்கையிலேயே அதிகக் கூடுதலான வருமானம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு கிடைப்பதாக ஒரு மாயை நிலவுகின்றது.

ஆனால், ஒரு வாகனத் தரிப்பிடம் மற்றும் இரண்டு மலசல கூடங்கள் தவிர, வேறு வருமானம் கிடையாது. பருவகாலத்தில் அடிவாரத்திலிருந்து மலையுச்சி வரை ஏராளமான கடைகள் இருந்தாலும் வரி அறவிட முடியாது.

வரி அறவீட்டுக்கான வர்த்தமானி அறிவித்தல் இல்லாமையே காரணமாகும்.

எனினும் பிரதேச சபை ஒரு பொதுவான சேவையை தவறாமல் வழங்கி வருகின்றது, இவை தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்துக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது, என்றார்.