-மஸ்கெலியா நிருபர் –
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநாடு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆந் திகதி நுவரெலியாவில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி டிசம்பரில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஹட்டன் அஜந்தா விருந்தகத்தில் இடம்பெற்ற இளைஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஜி.நகுலேஸ்வரன், நிர்வாகச் செயலாளர் கே. ஸ்ரீதரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த மேற்படி கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து வட்டார ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
பழனி திகாம்பரம் மேலும் பேசுகையில்,
மலையக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இளைஞர்கள் வித்தயாசமான முறையில் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள், எனவே, எதிர்காலத்தில் அரசியலில் ஆர்வமுள்ள புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமுகத்தில் இளைஞர்கள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதால், அவர்களை அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றேன்.
அந்தந்த வட்டாரத்தில் மக்களின் செல்வாக்கு மிக்கவர்களைத் தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும், அதற்காக விரைவில் “வட்ஸ் அப்” குரூப் ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் அபிப்பிராயங்கள், அபிலாஷகள் பற்றி கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மாத்திரமே வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடியும், எல்லோருக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது, எனவேதான், தலா 10 பெறச் காணியை வழங்குமாறு வலியுறுத்தி வருகிறோம், அவ்வாறு காணி கிடைக்கும் பட்சத்தில் மக்கள் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு தாங்களாகவே வீடுகளை நிர்மாணித்துக் கொள்வார்கள்.
நான் அரசியலுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகின்ற நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகள் குறைந்திருந்தாலும் நான் தோல்வியடையவில்லை, அந்தளவுக்கு என்னால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை நினைவுகூர்ந்து மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களித்துள்ளார்கள்.
மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தை நல்லாட்சி அரசாங்கத்தில் நான்தான் ஆரம்பித்து வைத்தேன், ஆனால், இன்று யார் யாரோ அதற்கு பிள்ளையார் சுழி போட்டதாக உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக இருக்கின்றது.
யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்பது மக்களுக்குத் தெரியும், அத்தோடு மலையகத்தில் மாற்று அரசியலைக் கொண்டு வராவிட்டால் எதிர்காலத்தில் யாரும் தலைதூக்க முடியாது, நாம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், தொழிலாளர்களின் சம்பள உயர்வை இதுவரை போராடித்தான் பெற்று வந்துள்ளோம், வரவு செலவுத் திட்டத்தில் எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதையும் பார்ப்போம்.
அடுத்த ஆண்டு பெப்ரவரி 20 இல் எமது சங்கத்தின் மாநாடு நடத்தப்படவுள்ளது, அதற்கான ஏற்பாடுகளும், வட்டார ரீதியில் தலைவர், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மலையகத்தில் கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளோம், அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும், என்றார்.



