மட்டக்களப்பில் “ஈழத்தமிழர் முன்னணி” புதிய தமிழ் கட்சி உதயம் ?
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் , இக்கட்சியின் அலுவலகம் கிரான் பகுதியில் எதிர்வரும் 9ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக, புதிய கட்சியின் உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கட்சியில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்துள்ளதாகவும் , புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கட்சியின் கருணா அம்மானுடன் இருந்தவர்களினால் அவருடைய கட்சிக்கு எதிராக அவர் இருக்கின்ற அதே கிரான் பகுதியில் மாவீரர் குடும்பங்களின் ஆதரவு மற்றும் முன்னாள் போராளிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முக்கிய நபர்களின் தலைமையில் புதிய கட்சி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இருந்த போதிலும் கட்சியின் பெயரையோ ஏனைய விடயங்கள் தொடர்பான இத்தகவலை இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து உறுதிப்படுத்த முடியவில்லை.
தற்போது புதிய கட்சியை புதுப் பொலிவுடன் ஆரம்பிக்க தேவையான முன் ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. போலி தமிழ் தேசியம் பேசி தமிழ் தேசியத்தையும், மக்களையும் ஏமாற்றி வரும் போலி தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக செயற்படும் கட்சியே எமது கட்சி . எமது எதிரியை தீர்மானித்துவிட்டு தான் களத்தில் இறங்கியிருக்கிறோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
