 
												NEXTGEN LEADERS திட்டத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
ஜனாதிபதி செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளையும் மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் NEXTGEN LEADERS திட்டத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில், திருகோணமலை இந்துக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
“Clean Sri Lanka” திட்டத்தின் மூன்று முக்கிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நெறிமுறைகள் துறையின் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாடசாலை மாணவர்களின் மென் திறன்களை வளர்ப்பது, அந்த குழந்தைகளின் தலைமைத்துவ திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை ஒரே நேரத்தில் வளர்ப்பது, குழந்தைகளில் சுய நெறிமுறை முறையை ஏற்படுத்துவது, பாடசாலை மற்றும் அவர்களின் தாய்நாடு குறித்து குழந்தைகளில் நேர்மறையான அணுகுமுறைகளை வளர்ப்பது, பெற்றோரின் பங்கை வளர்ப்பது மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான விழிப்புணர்வை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருகோணமலை, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய மூன்று கல்வி வலயங்களில் உள்ள பத்து (10) பாடசாலைகளைச் சேர்ந்த நூறு (100) மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தமிழ் மொழிமூலக் மாணவர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது, மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தமிழ் மொழிமூலத்தில் மூன்று நிகழ்ச்சித்திட்டங்களும் சிங்கள மொழிமூலத்தில் இரண்டு நிகழ்ச்சித்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பயிற்சி பெற்ற மாணவர்கள் மூலம் முழுப் பாடசாலை முறையிலும் மாணவர்களுக்குக்கும் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. நிமல்ரஞ்சன், திருகோணமலை, கந்தளாய் மற்றும் மூதூர் வலயக் கல்வி அலுவலகங்களின் கல்விப் பணிப்பாளர்கள், திருகோணமலை இந்து கல்லூரியின் அதிபர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



 
			

