போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இன்று வியாழக்கிழமை முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறித்து, நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் அழிக்கும் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்திற்கு இனிமேலும் இடமளிக்க தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, கைது செய்தல், புனர்வாழ்வு, தடுப்பு, பொதுமக்கள் அழுத்தம், மதம், விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு பன்முகத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் இயற்கையாக உருவாகவில்லை என்றும், அது நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் நிழலின் கீழ் போலியான ஒரு அதிகாரத்தை உருவாக்கிக்கொள்வதற்கு குற்றவாளிகளுக்கு இருந்த வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதால், அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து அந்த வலையமைப்பில் இருந்து அகன்று செல்லுமாறு அதனை ஆதரிக்கும் அரச அதிகாரிகளுக்கு கூறுவதாகவும் தெரிவித்தார். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட எவருக்கும் இனி ஒளிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

மேலும், கிராமங்களுக்கும் மதத் தலங்களுக்கும் இடையிலான கலாசார தொடர்பைப் பயன்படுத்தி இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதில் முன்னணியில் இருக்குமாறு மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்தப் பணியை வெற்றிகரமாக்கும் வகையில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும் போது ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் பேணுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் போதைப்பொருள் பரவல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதுடன், பல குற்றங்கள் போதைப்பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. திறமையாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய அளவிலான வேலைத்திட்டத்தின் மூலம் இந்த அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தற்போது இனங்கண்டுள்ளதுடன், இந்த தேசிய இலக்கை அடைய ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய பணியை செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பரந்த விளம்பரச் செயல்முறை மூலம் இந்த அச்சுறுத்தல் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை துண்டித்தல், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனையை கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.