“முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாடு” – போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாடு” எனும் தொனிப் பொருளிலான போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், இலங்கை சமூகத்தின் ஒழுக்கம், நலன் மற்றும் எதிர்கால தலைமுறையின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாகும் என வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“விச போதைப் பொருளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் சமூக கடமையாகும். இந்த முயற்சிக்காக அரச இயந்திரங்கள், முப்படைகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமித்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக பெண்கள் சமூகம் மற்றும் குடும்பங்களுக்காக இது மிகப்பெரும் நன்மையை ஏற்படுத்தும். போதைப் பொருள் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் மீண்டும் நம்பிக்கை மிக்க வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இது வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் சார்பில் ஜனாதிபதியின் இவ்வுயர்ந்த முயற்சியை மனமார்ந்த பாராட்டுக்களுடன் வரவேற்கிறோம்.

இந்த முயற்சி ஒரு அரசாங்கத் திட்டமாக மட்டுமல்லாமல், முழு நாட்டின் மீட்சிக்கான மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

“போதைப் பொருள் இல்லாத இலங்கை — பாதுகாப்பான, சுகமான சமுதாயம்” என்பது எங்களின் நோக்கமாகும்.

இந்த இலக்கை அடையும் பாதையில் ஜனாதிபதிக்கும் அவரின் அணியினருக்கும் எங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கப்படும் என றிகாஸா ஷர்பீன் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.