மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து பிரதேச மட்டத்திலான கலை இலக்கிய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக கவிதை, சிறுகதை, பாடல் நயத்தல், கதை சொல்லுதல் போன்ற வாய்மொழி மூலமான போட்டிகள் பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கனிஸ்ட பிரிவு, சிரேஸ்ட பிரிவு, அதி சிரேஸ்ட பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில்
சிறுகதை, கவிதை, சிறுவர் கதை ஆக்கப் போட்டி மற்றும் திரைப்பட விமர்சனப் போட்டி என்பன இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வில் பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவிலிருந்து மாவட்ட மட்டம் மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களது கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது 2024ம் ஆண்டு இலக்கிய போட்டியில் தேசிய ரீதியில் நாட்டார் பாடல் போட்டியில் 1ம் இடத்தினை பெற்று வெற்றி பெற்ற மாணவன் செல்வன் வி. டிஹாணன் பாராட்டி கௌரவம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கலாசார அதிகார சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.