விஜய் வழங்கிய நிதியுதவியை திருப்பி அனுப்பிய பெண்!

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வழங்கிய 20 இலட்சம் ரூபா நிதியுதவியை, பெண் ஒருவர் திருப்பி அனுப்பியுள்ளார்.

கடந்த மாதம் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 20 இலட்சம் ரூபா நிதியுதவி வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும், அவர்களின் குடும்பத்தினரைச் சென்னைக்கு அழைத்து இன்றைய தினம் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவியான சங்கவி என்ற பெண் விஜய்யால் வழங்கப்பட்ட 20 இலட்சம் ரூபா இழப்பீட்டைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: “கரூர் நெரிசலில் எனது கணவர் ரமேஷ் உயிரிழந்தார். விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தைத் திருப்பி அளித்தேன். பணம் வேண்டாம், ஆறுதல் மட்டுமே வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்குத் தெரியாமல் தனது உறவினர்களைத் த.வெ.க. நிர்வாகிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட சங்கவி குற்றம் சாட்டியுள்ளார்.