2 இலட்சத்தை அண்மித்த போதைப்பொருள் வழக்குகள்
இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான சுமார் பத்து மாத காலப்பகுதியில், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலப்பகுதியில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 320 சுற்றிவளைப்புகளில், போதைப்பொருள் தொடர்பில் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 938 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, 60 இலட்சத்து 19 ஆயிரத்து 343 க்கும் அதிகமான நபர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வகைகளில், ஐஸ் (Ice) போதைப்பொருளே அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மொத்தமாக 2,539.5 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக 66,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, 1,482.8 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டு 58,130 வழக்குகளும், 14,434.4 கிலோகிராம் கஞ்சா மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு 58,724 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 32.6 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டு 91 வழக்குகளும், 30 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு 2,808 வழக்குகளும், 575 கிலோகிராம் வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு 1,474 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான சுற்றிவளைப்புகளின் போது, ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்கள் உட்பட மொத்தமாக 2,097 துப்பாக்கிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
