மட்டக்களப்பில் மினி சூறாவளியால் 68 வீடுகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் மினி சூறாவளி வெள்ளிக்கிழமை வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் வீசி எறியப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார்.
மேலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் சிலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த மினி சூறாவளி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றதை அடுத்து ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதூர் சேத்துக்குடா உட்பட பல பிரதேசங்களில் வீடுகளின் ஓடுகள் மற்றும் சீற்றினால் அமைக்கப்பட்ட கூரைகள் தூக்கி எறிந்ததுடன் ஓடுகள் சீற்றுக்கள் உடைந்து வீழ்ந்ததுடன் தகரத்தினால் அமைக்கப்பட்ட கூரைகள் வீசி ஏறியப்பட்டமையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
அதேவேளை வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்த பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகள் அறுந்ததையடுத்து சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, வேலிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்துடன் மதில்கள் சில உடைந்து சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த அனர்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
