மர்மமான ஹீலியம் பலூன் : தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் மூடிய லிதுவேனியா

மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும் இம்மாதத்தின் பால்டிக் மாநிலத்தில் மூன்றாவது முறையாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனால் இரண்டு விமான நிலையங்களும் உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை மூடப்பட்டதுடன், பெலாரஸ் எல்லை ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை மூடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக கடந்த ஆண்டில் 966 பலூன்கள் லிதுவேனியாவுக்குள் நுழைந்துள்ளன.

இந்த ஆண்டு இதுவரை 500க்கும் மேற்பட்ட பலூன்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புகையிலை பொருட்கள் விலை அதிகம் என்பதால், கடத்தல்காரர்கள் பெலாரஷ்ய சிகரெட்டுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்ப இந்த பலூன்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதனால் விமான பயணிகள் மற்றும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

லிதுவேனியா அரசாங்கம் இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளைத் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.