நைஜீரியாவில் எரிபொருள் பாரவூர்தி வெடித்து சிதறியதில் நேர்ந்த துயர்
நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்திலிருந்து நைஜர் மாகாணத்திற்கு அருகில், எரிபொருள் பாரவூர்தி ஒன்று வெடித்துச் சிதறியதில் 39 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்திலிருந்து நைஜர் மாகாணத்திற்கு எரிபொருள் பாரவூர்தி ஒன்றில் நேற்று புதன்கிழமை எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது.
நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள வீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் குறித்த பாரவூர்தியில் இருந்த எரிபொருள் கசிந்து வெளியேறியது.
அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் பாரவூர்தி வெடித்துச் சிதறியது.
இந்தச் சம்பவத்தில் வீதியோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
