
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறையும், நல்ல நேரமும்!
முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த விரதமாகக் கருதப்படுவது கந்தசஷ்டி விரதம் ஆகும்.
திருமணம், குழந்தைப் பாக்கியம், சொந்த வீடு, நோய்கள் தீர, வேலை என எந்தக் குறை தீர வேண்டும் என்றாலும் முருகப் பெருமானை மனதார வேண்டி, மகா கந்தசஷ்டியில் விரதம் இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.
கந்த சஷ்டி விரதம் பல முறைகளில் கடைப்பிடிக்கலாம். இவற்றில் உங்களுக்கு வசதியான முறையில் சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம். வீட்டில் இருந்தோ அல்லது கோவிலில் சென்று தங்கியோ கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.
வீட்டில் இருந்த படியே விரதம் இருப்பவர்கள் கலசம் அமைத்தோ, படம் மட்டும் வைத்தோ விரதம் இருக்கலாம்.
வீட்டில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை :
வீட்டில் கலசம் வைத்து விரதம் இருப்பவர்கள், கலசத்தில் தண்ணீர் நிரப்பி, வாசனைத் திரவியம், மஞ்சள் பொடி, ஒரு எலுமிச்சைப் பழம், ஒரு ரூபாய் நாணயம், 2 ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டு, அதன் மீது தேங்காய், மாவிலை வைத்துக் கலசம் அமைக்க வேண்டும்.
வாழை இலை அல்லது தாம்பூலத்தில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி, அதற்குப் பிறகு கலசம் வைத்து, கந்தசஷ்டியின் ஏழு நாட்களும் வழிபட வேண்டும்.
படம் வைத்து வழிபடுபவர்கள், ஒரு பலகையில் சிவப்பு நிற வஸ்திரம் விரித்து, அதன் மீது வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகப் பெருமானின் படத்தை வைத்து வழிபட வேண்டும். காப்பு கட்டாமலும் தினமும் முருகனுக்கு நைவேத்தியம் படைத்து, வழிபடலாம்.
காப்பு கட்ட நல்ல நேரம் :
ஒக்டோபர் 22 ஆம் திகதி காப்பு கட்டி, கலசம் அமைத்து, கந்த சஷ்டி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
நல்ல நேரம், காலை 4 முதல் 6 மணி வரை, காலை 6 முதல் 7 மணி வரை, காலை 09.10 முதல் 10.20 மணி வரை, பொதுவாகவே விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பிப்பவர்கள் காலை 6 மணிக்கு முன்பாக ஆரம்பித்து விடுவது சிறப்பு.
விரதம் ஆரம்பிக்கும் முறை :
காலையில் எழுந்து முதலில் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு, விநாயகரை வணங்கி விட்டு, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு, விரதத்தை ஆரம்பிக்கலாம்.
முதலில் என்ன நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறீர்களோ, அதை முருகப் பெருமானிடம் மனதார சொல்லி விட்டு, அந்த வேண்டுதல் நிறைவேறவும், இந்த விரதம் நல்லபடியாக நிறைவடைந்து, அதன் முழுப் பலனும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு விரதத்தை ஆரம்பிக்கலாம்.
முருகப் பெருமானுக்கு மலர் சாற்றி, சர்க்கரைப் பொங்கல் அல்லது கோதுமை பாயசம் அல்லது கோதுமை பொங்கல் இவற்றில் ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.
நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்ற திருப்புகழைப் பாராயணம் செய்து, அதைத் தினமும் காலையிலும், மாலையில் சொல்லி முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
முருகனை வழிபடும் முறை :
வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி, அதன் மீது ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு விளக்கு வீதம் அதிகரித்துக் கொண்டே செல்லலாம்.
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்காமல், நாள் முழுவதும் முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.
கலசம் அமைக்கும் போதும், படம் வைத்து வழிபடும் போதும், எப்போதும் ‘ஓம் சரவண பவ’ மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
108 முறை இந்த மந்திரத்தைச் சொல்லுவது சிறப்பு.
இது தவிர கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் என முருகப் பெருமானுக்கு விருப்பமான பாடல்களைத் தினமும் காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
