வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கு இடைக்காலத் தடை!

வவுனியா மாநகர முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதன்படி, மனுவின் விசாரணை நிறைவடையும் வரை இடைக்காலத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

வவுனியா மாநகர சபையின் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்ட போது, ஜனநாயக தேசிய முன்னணியின் மேலதிக உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வர் பதவியைக் கோரி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தார்.

எனினும், அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்துவரும் நிலையில், மாநகர சபையில் போட்டியிட்டமை மற்றும் பதவியைப் பெற்றமை என்பன சட்ட விதிகளை மீறிய செயற்பாடுகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, வவுனியா மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கந்தையா விஜயகுமார் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் பிரேமதாஸ் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த நான்கு தவணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.