நாவிதன்வெளியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு 15 ஆயிரம் அறவிட தீர்மானம்
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு சபையில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் முன்வைத்த பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபை வாதப்பிரதிவாதங்களின் பின்னர் வாக்கெடுப்பின் அடிப்படையில் 15 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் (04 வது சபை அமர்வு) சபை மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் உப தவிசாளர் மற்றும் சகல உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இந்த அமர்விலையே பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.
தனது உரையில் மதுபான விற்பனை நிலையங்களினால் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார். இதன்போது போதையொழிக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் சாராய பார்களினால் சபைக்கு வருமானம் வந்தாலும் அந்த வருமானம் எத்தனை பேரின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் குஞ்சர மூர்த்தி நிரோஜன் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை உயர்த்தினால் மதுப்பிரியர்கள் சிரமப்படுவார்கள் என்றும் இந்த கட்டண உயர்வால் அதை ஈடுசெய்ய போத்தலுக்கு 1000 ரூபாய் உயர்த்த வேண்டி வரும். இதனால் மதுபிரியர்கள் இடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் வரும். அதனால் அரசாங்கமும் சிரமத்தை எதிர்கொள்ளும் என்றார். சபை நாகரிகத்தை பேணுமாறு கோரி இந்த கருத்தை தவிசாளர் ரூபசாந்தன் கண்டித்தார்.
இது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், பல்வேறு கருத்துக்கள் முன்மொழியப்பட்டதால் சபையில் வாக்கெடுப்பு நடத்தி மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரமாக உயர்த்த சபை தீர்மானம் நிறைவேற்றியது.