ஆய்வு கட்டுரை எழுத்தாளர்களுக்கு விருது

தமிழன் பத்திரிகையின் விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருதையும் தமிழன் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர், ஆய்வு கட்டுரை எழுத்தாளர் நூருல் ஹுதா உமர் இவ்வாண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

ஊடகப் பரப்பில் சிறந்து விளங்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களை கௌரவிக்கும் “குரு விருதுகள் சீஸன் 02” விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிஸாம் ஏ.பாவா தலைமையில் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெற்ற போதே இந்த விருதுகளை பெற்றுள்ளனர்.

குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற இவ் விருது வழங்கல் விழாவில் மயோன் குரூப் நிறுவனத்தின் தவிசாளரும், சமூக செயற்பாட்டாளருமான மயோன் எடுகேஷன் எய்ட் தலைவர் எம்.எம்.றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும், வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.இர்பான் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சட்டத்தரணி எம்.கே.எம்.பர்சான், நெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் என்.எம்.சப்னாஸ், டொப் பிரிண்டிங் நிறுவன பணிப்பாளர் எம்.ஐ.எம்.மர்லியாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் இந்த விருது வழங்கும் விழாவில் விவரணம், சுகாதாரம், சுற்றாடல் எழுத்தாளர்,மனிதாபிமான உரிமை தொடர்பான ஊடகவியலாளர்கள், வானொலி அறிவிப்பாளர்கள், விளையாட்டு செய்தி அறிக்கையாளர், சிறந்த இளம் யூடியுப்பாளர்கள், கட்டுரை எழுத்தாளர், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல்வேறுபட்ட துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

.