மறைந்த கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசல் : 3 பேர் கொலை, பலர் காயம்!

மறைந்த கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த, கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்கா (வயது 80), கடந்த ஒக்.15 ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தனி விமானம் மூலம் கென்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலைநகர் நைரோபியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக ஒக். 16 ஆம் திகதி அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது, அவருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

இதனால், மக்களை விரட்ட பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஒக். 17 ஆம் திகதி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் ஆயிரக்கணக்கான கென்ய மக்கள் திரண்டுள்ளனர்.

அப்போது, அங்கு கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்ட நிலையில், நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.