மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல்
நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தொற்று அந்நாட்டில் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், இன்புளூயன்சா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பலருக்கும் மர்ம காய்ச்சலும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் இந்த மர்ம காய்ச்சல் பரவல் ஒரே வாரத்தில் 14-ல் இருந்து 97 ஆக உயர்ந்து உள்ளது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 6 ஆயிரம் மாணவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களாக 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் முக கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
உலக சுகாதார அமைப்பும் இதனை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய கொரோனா வைரஸ் என்று வகைப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.