இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்!
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக இவர்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் இன்று புதன்கிழமை மாலை தாயகம் திரும்பவுள்ளனர்.
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியும் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது ‘கணேமுல்ல சஞ்சீவ’, கடந்த பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.